மிக சிறந்த பதிவு . வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களும் மக்களுக்கு தெரியவேண்டும் எதிர்கால சந்தததியினருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் முத்திரை சந்தியில் இருக்கும் அவரது இல்லத்தை பார்க்கும்போதெல்லாம் அவரின் ஞாபகம் வரும் . எழுபதாம் ஆண்டு தேர்தலில் அவர் சுமார் ஐந்நூறு வாக்குகளால் தோற்றார்
நாகநாதன் அய்யாவுக்கு மக்களுக்கும் இடையில் இருந்த சிலர் மக்களை அந்நியப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டார்கள் அவரின் தோல்விக்கு அதுதான் காரணம்!
அப்போது நல்லூர் பிரதேச சபை தலைவராக இருந்த அமரர் கி துரைசிங்கம் (நொத்தாரிசு) அவர்கள் இருந்தார்கள் அவர் தமிழரசு கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்
அதுமட்டுமல்ல அவரது பேருந்து அவரது அச்சகம் போன்றவை தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்தன. அவற்றை ஒரு சேவையாக கருதியே அவர் செய்தார்.
அப்போது உள்ளூராட்சி அமைச்சராக அமரர் திருச்செல்வம் அவர்கள் இருந்தார்.
எந்தவித முகாந்திரமும் இன்றி தனிப்பட்ட ஒருசிலரின் தவறான தகவல்கள் அடிப்படையில் அந்த நல்லூர் பிரதேச சபையை அமைச்சர் திருச்செல்வம் கலைத்தார் இத்தனைக்கும் அது தமிழரசு கட்சியின் சபையாகவே இருந்தது
திருச்செல்வம் நாகநாதன் போன்றவர்க்ள கொழும்பையே வசிப்பிடமாக கொண்டிருந்தமையால் உள்ளூர் விடயங்கள் அவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை
இதை பயன்படுத்தி சிலர் செய்த சதியால் தமிழரசு கட்சியே தனது ஆரம்ப கால் தூண் ஒன்றை சரித்தது.
இதனால் வெறுப்புற்ற அமரர் துரைசிங்கம் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார்
இந்த காலக்கட்டத்தில் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊர்காவல்துறை நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அமரர் கி துரைசிங்கம் அவர்களின் வீடு தேடி வந்து தனது தமிழர் சுயாட்சி கழகத்தில் வேட்பாளராக நிற்குமாறு வேண்டி கொண்டார்
அதற்கு மறுப்பு தெரிவித்த திரு துரைசிங்கம் அவர்கள் தமிழரசு கட்சிக்கு எதிராக நிற்கமாட்டேன் என்று கூறினார்
ஆனாலும் தமிழர் சுயாட்சி கழகம் தமிழரசு கட்சியின் அடிப்படை கொள்கையையே கொண்டிருப்பதனால் அதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்
பின்பு தமிழர் சுயாட்சி கழகத்தின் நல்லோர் வேட்பாளர் திரு அம்பலவாணர் இரத்தினம் அவர்களுக்காக பிரசாரம் செய்தார்
அத்தேர்தலில் அவர் சுமார் 1500 வாக்குகளை பெற்றார் அதில் குறைந்தது ஆயிரம் வாக்குகளாவது அமரர் துரைசிங்கம் அவர்களின் முயற்சியால் கிடைத்தது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
ஏனெனில் அந்த பிரதேசத்தின் அரசியல் வளர்ச்சியே அமரர் துரைசிங்கம் அவர்களின் அரசியலோடு பின்னி பிணைந்தே வளர்ந்த ஒன்றாகும்
தேர்தலின் இறுதி நாட்களில் தந்தை செல்வாவும் தங்களின் தந்தையும் வேறு சிலரும் அமரர் துரைசிங்கம் அவர்களின் வீட்டிற்கு வந்து தமிழரசு கட்சிக்கு பிரசாரம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்கள்
ஆனாலும் காலம் கடந்து விட்டது .
நான் திரு நவரத்தினத்திற்கு வாக்கு கொடுத்து விட்டேன் என்று மறுத்து விட்டார்
மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் எப்போது நெருக்கமான உறவு இருக்கவேண்டும்
இந்த ஒற்றை காரணத்தால் மட்டுமே திரு நாகநாதன் தோற்றார்
இந்த சம்பவத்தின் பின்பு தமிழர் விடுதலை கூட்டணியின் பிரசார கூட்டம் நல்லூர் வலையம்மன் கோயிலடியில் நடந்தது
அக்கூட்டத்தில் அமரர் துரைசிங்கம் அவர்களோடு அமரர் அமிர்தலிங்கம் அமரர் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்
அக்கால கட்டங்களில் அவர்கள் மிகவும் நட்போடு இருந்தார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது
இந்த படத்தில் இருப்பது அமரர் திரு கி துரைசிங்கம் அவர்கள்
Amirthalingam Baheerathan : வைத்திய கலாநிதி ஈ. மு. வி. நாகநாதன்.
தமிழரசு கட்சியின் ஒரு ஆரம்பகால தலைவர் டாக்டர் இ.மு. வி நாகநாதன் அவர்களுடைய நினைவு தினம் ஆகஸ்ட் 16ம் தேதி ஆகும் . அன்னாரின் சில நினைவுகளை மீட்ட எண்ணினேன். இதில் அன்னாரை அவருடைய இறுதி காலங்களில் அறிந்தவன் என்றாலும் கூட அவர் ஈடுபட்ட போராட்டங்கள் பற்றியும் அன்னார் பற்றி எனது தந்தையார் கூறிய கருத்துகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள, பதிவிட விரும்புகிறேன்.
இந்தியாவில் சென்னையில் 1906ல் பிறந்து வளர்ந்த அன்னார் இந்திய சுதந்திர போராட்டத்தினாலும் சாத்வீக போராட்டத்தினாலும் கவரப்பட்டவராவார். ஒரு கால கட்டத்தில் இந்திய சுதந்திர போராட்ட ஈடுபாடு காரணமாக பிரித்தானிய அரச பிரதிநிதி அன்றைய மெட்ராஸ் இராஜஸ்தானிக்கு வந்த போது அவரது வருகையை எதிர்த்த சுதந்திர போராட்ட வீரர்களுடன் சேர்ந்து கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டமை அன்னாரது விடுதலை வேட்கைக்கு எடுத்து காட்டாகும். சென்னை மருத்துவ கல்லூரியில் தனது ஆரம்ப மருத்துவ கல்வியை முடித்தவர் பின்னர் இங்கிலாந்து சென்று இலண்டன் கைஸ் (Guys college) இல் தனது முதுகலை பட்டத்தை பெற்றவராவார்.
தந்தை செல்வாவுடன் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து, அமரர் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம், இலங்கை பிரசாவுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த போது வெளியேறி இலங்கை தமிழரசு கட்சியை அமைத்தவர்களில் முக்கியமானவராவார். அதனை தொடர்ந்து தனது பல லட்சம் வருமானங்களை அளித்து கொண்டிருந்த வைத்திய தொழிலை ஒரு பக்கத்தில் விட்டு விட்டு எமது இனத்தின் விமோசனத்திற்காக தனது சேவையை்தொடர்ந்தார். இங்கிலாந்தில் தனது மருத்துவ மேல் படிப்பை முடித்து ஒரு குடும்ப வைத்தியராக கொழும்பில் சேவையாற்றியவர் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தனது வைத்திய தொழிலை தொடர்ந்தார். ஒரு காலத்தில் அதிகமான வருமான வரி செலுத்திய மருத்துவர் என்ற பெருமைக்குரியவர். இவையெல்லாவற்றையும் ஒதுக்கி, தமிழினத்திற்காக தனது சேவையை தந்தை செல்வாவுடன் சேர்ந்து தமிழரசு கட்சியினூடாக முன்னெடுத்தார். வடமாகாணத்தின், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு எமது உரிமை போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தமிழரசு கட்சியின் 10வது தேசிய மாநாட்டில் கல்முனையில் 5வது தலைவராக தெரிவானார். தலைவராக இருந்த போதும் எந்த பதவியிலும் இல்லாத போதும் தமிழினத்திற்கு தனது சேவையை தொடர்ந்தார். அன்னார் மூதவை உறுப்பினராக தமிழரசு கட்சியின் சார்பில் பதவி வகித்து பின்னர் 1960 இல் இருந்து தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நல்லூர் தொகுதியை பிரதிநிதித்துவ படுத்தினார். 1970ல் திரு அருளம்பலம் அவர்களிடம் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட ஆனி 5ம் தேதி 1956ம் ஆண்டு காலிமுகதிடலில் தமிழரசு கட்சி அதை எதிர்த்து சத்தியாகிரகம் செய்தார்கள். அந்த சத்தியாகிரகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதை விடுத்து, அதை ஒடுக்குவதற்கு சிங்கள காடையர்களை ஏவியது பண்டாரநாயக்கா அரசாங்கம். சத்தியாகிரகிகள், பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிங்கள காடையர்களால் கற்களாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டார்கள். செல்லையா என்ற சத்தியாகிரகியின் காது ஒரு சிங்கள காடையரால் கடிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் இரு புதல்வர்களும் அவர் கண்முன்னாலேயே பந்தாடப்பட்டார்கள். பல சத்தியாகிரகிகள் குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டு அருகிலிருந்த வாவியில் வீசப்பட்டனர். தலைவர் வன்னியசிங்கம் அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டது. தலைவர் திரு நாகநாதனின வேட்டி கிழிக்கப்பட்டு அவர் தனது மானத்தை காக்க அருகிலிருந்த கோல்பேஸ் (Gale face) ஹட்டலின் உள்ளே செல்ல முறபட்ட போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு கடை நிலை சிப்பந்தி அன்னாரை தாக்கினார். எனது தந்தையாரின் தலையை சிங்கள காடையரின் கற்கள் பதம் பார்த்து அதிலிருந்து குருதி பீறிட்டது. ஒரு தலைசிறந்த வைத்தியராக தனது தொழிலை பார்த்திருந்த திரு நாகநாதன் அவர்கள் அன்று மண்ணில் புரட்டி எடுக்கப்பட்டார். இது தமிழினத்திற்காக அன்னார் பட்ட துன்பத்திற்கு ஒரு எடுத்து காட்டு.
இதை விட 1961ம் ஆண்டு தமிழரசு கட்சி வட கிழக்கு எங்கும் சத்தியாகிரகத்தை நடாத்தியது. தனது கணவரால் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை 1961 ம் ஆண்டு அன்றைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் 1961ல் வட கிழக்கில் அமுலாக்க முற்பட்டதை எதிர்ததே இந்த சாத்வீக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் மூலம் இரண்டு மாதங்களுக்கு அரச இயந்திரம் செயல்படாமல் தமிழ் பகுதிகளில் முடக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சத்தியாகிரகத்தின் இரண்டாம் நாளில் அரச அதிபர் திரு சிறீகாந்தா அவர்கள் உயர்நீதி மன்ற திறப்பு விழாவிற்கு செல்ல முற்பட்ட போது அவரை தடுத்து அரச அதிபரின் இல்லத்திலிருந்து வாகனம் வெளியேறும் பாதை சத்தியாகிரகிகளால் முற்றுகையிடப்பட்டது. அந்த நேரத்தில் பொலிசார் குண்டாந்தடி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட Dr நாகநாதனின் தலையில் அடித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் குண்டாந்தடி இரண்டாக முறிந்தது. இதன் பின்னரே அன்னாரின் பெயருக்கு முன்னால் “இரும்பு மனிதன்” எனும் அடைமொழி இடம் பெற்றது. உடைந்த குண்டாந்தடியின் ஒரு பகுதியை அன்னார் தனது வீட்டில் பலகாலம் வைத்திருந்தார்.
அவருக்கு ஆங்கிலத்திலிருந்த நடைப் பிரவாகம் தமிழில் இருக்கவில்லை. கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கையில் அசல் தமிழ்ச் சொற்கள் அவருக்கு உடனடியாக வராவிடில் மேடையில் இருக்கும் எனது தந்தையை நோக்கி உரிமையுடன் “சொல்லடா தம்பி” என விளிப்பார்.
1970 தேர்தலில் தான் தோல்வியுற்ற போதிலும் அதை விட என் தந்தையின் தோல்வியில் மிகுந்த கவலையடைந்து எமது வீட்டுக்கு உடன் வந்த அவருக்கு, எனது தந்தையாருடன் இருந்த பாசப்பிணைப்பு இன்றைய சந்ததியினருக்கு தெரிந்திருக்க வழியில்லை.
தேர்தல் தோல்வியின் பின்னர், அந்த தேர்தலில் தோல்வியடைந்திருந்த எனது தந்தையாரையும் அழைத்து கொண்டு இரண்டு குடும்பங்களும் அன்னாரின் ஏற்பாட்டில் நுவரேலியாவுக்கு போயிருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் தான் எனது தந்தையாருக்கும் அன்னாருக்கும் இருந்த உறவை அறியக்கூடியதாக இருந்தது. ஒரு மூத்த சகோதரனாக எனது தந்தைக்கு அறிவுரை வழங்குவதையும், அளவளாவுவதையும் பார்க்க கூடியதாக இருந்தது. அன்னார், சிறுவர்களாக இருந்த என் சகோதரனிடத்திலும் என்னிடத்திலும் அன்பையும் பாசத்தையும் பொழிந்தார். தனது இனிய குடும்பத்தையும் தமிழினத்தையும் தவிக்க விட்டு தனது 65 வது வயதில், 16/08/1971 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். அன்னாரை நினைவு கூருவோம்.
No comments:
Post a Comment